சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மற்றும் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில்,
திருச்சி மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ4,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நன்கு அறிந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருங்காலத்திலும் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயரைப் பெற வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சாலை வசதி, சாக்கடை திட்டங்கள், குடிநீர் மேம்பாடு, பேருந்து வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கான பன்னோக்கு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகளாக தங்களது கடமையை நிறைவேற்றியுள்ளளோம்.
மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய மேயர், 2026–27ஆம் ஆண்டில் இதுவரை 84 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, ரூ2.50 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.2026–27ஆம் ஆண்டில் இதுவரை 864 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன மற்ற மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில், நாய்களின் இனப்பெருக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்திய மாநகராட்சியாக திருச்சி திகழ்கிறது
வெறிநாய் மற்றும் நோயுற்ற நாய்களை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் நான்கு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை இம்மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறது. அதிகாரிகள் இதனை விரைவுபடுத்த வேண்டும் என்று பேசினார்
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டு குறைகள் குறித்து பேசினார்கள் அதன் விவரம் பின் வருமாறு
சங்கர் (திமுக கவுன்சிலர்): – திருச்சி மாநகராட்சியில் வணிக சொத்து வரி, எஸ்.யு.சி கட்டண உயர்வை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகக் கடைகளுக்கு த கமர்ஷியல் சொத்து வரி மற்றும் எஸ்.யு.சி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 27.04.2026 அன்று இணை ஆணையர் வினோத் மற்றும் மாநகராட்சி மேயரிடம் க நேரடியாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் தவறான உயர்வு அல்லது மென்பொருள் பிழை காரணமாக வணிக சொத்து வரி மற்றும் எஸ்.யு.சி கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வணிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், எனவே, வணிகர்களுக்கு ஏற்ற வகையில் மென்பொருளில் திருத்தம் செய்து, அதுவரை கமர்ஷியல் சொத்து வரி வசூலை நிறுத்தி வைக்கவும், பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள யு.ஜி.டி சேவைக் கட்டணத்தையும் சீரமைத்த பின்னரே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேயர் அன்பழகன் :- வணிகர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்
காஜாமலை விஜய் (திமுக): எனது வார்டில் பல தெருக்கள் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டிய நிலையிலேயே உள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக குறை சொல்லும் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு மேயர் மற்றும் அமைச்சரை அழைத்து செல்லவில்லை; எனவேதான் யாரும் குறை சொல்லவில்லை என நினைக்கிறீர்கள். மாநகர உறுப்பினர் தன் வீட்டு தேவைக்காக எனக்கு ஏற்பதாக நினைக்க வேண்டாம். பொதுமக்களின் நலன் கருதியே கேட்கின்றோம். மீண்டும் அவர்கள் முன்னர் எவ்வாறு ஓட்டு கேட்டு செல்வது? இதற்கு மேயர் பதில் சொல்லத் தேவையில்லை. அதிகாரிகள் பதில் சொல்லவும். உங்களால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்று விடுகிறேன். காஜாமலை டெர்மினல்ஸ் பகுதியில் ஒரு தெருவிளக்கு கேட்டு ஆறு மாதமாக முறையிட்டு வருகிறேன். ஆனால் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. அப்பகுதியில் இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதால் செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன்: பாதாள சாக்கடை தொகுப்பு-4 பணியில் உங்கள் வார்டு விடுபட்டிருந்தது. நான் முயற்சி எடுத்து வேறு பகுதிக்கு சென்ற ஏழு கிலோமீட்டர் பணியை உங்கள் பகுதிக்கு மாற்றி, மூன்று மீட்டர் தூரத்திற்கு முடிக்க சொல்லியுள்ளேன். அப்பகுதியில் தோண்டும் போது பாறை அதிக அளவில் இருப்பதால் பணிகள் தாமதமாகின்றன. பாறைகளை வெடிவைத்து தகர்க்க வேண்டும் என்றால் கலெக்டரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அதற்காக மனு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஓரிரு நாட்களில் பணிகள் துவங்கி முடிக்கப்படும்.
சுரேஷ் ( இ.கம்யு ) :- 2024 பட்ஜெட்டில் மழைநீர் வடிகால்கள் மாநகரம் முழுவதும் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணிகள் இதுவரை நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வந்த 2025–26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணிகளை எப்போது தொடங்குவது? மாநகராட்சி நிதிநிலையில் பற்றாக்குறை இருந்தால், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மற்றும் திட்டச் செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க கேட்டுக்கொள்கிறேன். அமைந்துள்ள புதிய அரசிடம் அந்த வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்து உரிய நிதி பெற்று நடவடிக்கைகளை துவங்கலாம்.
அப்பீஸ்முத்துக்குமார், (மதிமுக): எங்கள் வாழும் பகுதியில் அவ்வப்போது குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்பால் அதிக அளவிலான குடிநீர் வீணாகிறது. மேலும், எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் மழைநீர், வீணாகும் குடிநீர், கழிவுநீர் ஆகியன சம்பா வாய்க்கால் வழியாக விளைநிலங்களுக்கு சென்று விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
கமால் முஸ்தபா (திமுக) :-
எனது வாடை ஆழ்வார் தோப்பு பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் இருக்கிறது எனவே அந்த பகுதியில் மின்விளக்கு போட வேண்டும்.உயர் கொண்டான் கால்வாய்க்காலை தூர்வார வேண்டும்
சுரேஷ் இ.கம்யூ :- 2025- 26 ஆண்டுபட்ஜெட்டில்
ஒதுக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு பணிகள் நடந்துள்ளது அதன் பிறகு 2026 – 27 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணிகள் நடைபெறவில்லை இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வேதா நிறுவனம் துப்புரவு பணிகளை எடுத்த டெண்டர் முடிவடைகிறது ஆனால் அவர்கள் பணியாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் எனவே தொழிலாளர்களுக்கு குறைந்தது 25 ஆயிரம் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வழக்கறிஞர் பன்னீர்செல்வம் (திமுக):- மேல சிந்தாமணி பகுதியில் உள்ள கோட்டை வாய்க்கால் பாலம்இடிக்கப்பட்டு அணிகள் நடைபெறாமல் இருக்கிறது துறையிடம் கேட்டால் மாநகராட்சி குடிநீர் குழாய் செல்வதால் எங்களால் பணி செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள் எனவே அதனை முறையாக சரி செய்து பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சத்திரம் பேருந்து நிலையத்தில் பஸ்கள் அதிக அளவு நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது அதனை சரி செய்ய வேண்டும்.
நீலமேகம் (திமுக): – எனது வார்டில் பாதாள சாக்கடையை திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகள் பாதியிலேயே நிற்கிறது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அம்பிகாபதி (அதிமுக): – அதிமுக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.மாமன்ற கூட்டத்தில் மேயர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் (மேயர்)சொல்லவில்லை.அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.அப்படி இருக்கும் பொழுது நீங்கள் (மேயர்)வாழ்த்து சொல்லாதது ஏன்?
மேயர் அன்பழகன்:-அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் கோஷம் போட்டனர்.எனது வாடில் பாதாள சாக்கடை இரண்டு தெருக்களில் போடப்பட்டு பாதியிலே பணிகள் நிற்கிறது அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதாஸ்(திமுக) :- எனது வார்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது ஆனால் அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் இருக்கிறது
மேயர் அன்பழகன் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்திய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மாநகர மேயர், அனைத்து பிரச்சினைகளுக்கும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் கோட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
