டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தலைநகர் புதுடெல்லியில் ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் தடியடி நடத்தி அடக்குமுறையைக் கையாண்டனர். மத்திய அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கையை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் முகமது ஷெரீப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
