கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(57) என்பவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி (49), நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை பூர்வீகமாகக் கொண்ட ராஜமாணிக்கம் தற்போது கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பாண்டீஸ்வரி கடந்த எட்டு மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த செந்தில்குமார், இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 25.01.2026 அன்று இரவு சுமார் 8 மணியளவில், சணப்பிரட்டி கிராமம் R.S. புதூர் சாலை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது, செந்தில்குமாருக்கும் ராஜமாணிக்கத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், செந்தில்குமாரை பீர் பாட்டிலைக் கொண்டு அடித்து, கத்தியை வைத்து கழுத்தை அறுத்து தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் இருந்து டீசல் வாங்கி உடல் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
மனைவியுடன் தகாத உறவில் இருந்ததை கண்டித்த காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதும், குற்றவாளி போலீசார் விசாரணையில் கொலை சம்பவம் குறித்து அளித்த வாக்குமூலமும், கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம் மற்றும் பாண்டீஸ்வரி ஆகிய இருவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து வேறு யாரும் கொலை வழக்கில் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவரையும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

