உக்ரைன் நாட்டின் மீது 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. பரஸ்பர போர்நிறுத்த அறிவிப்புகள் அமலில் இருந்த போதிலும், ரஷ்யாவும் உக்ரைனும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் பரஸ்பரம் ஈடுபட்டுள்ளன.
இருநாடுகளுக்கு இடையிலான சமீபத்திய இந்த ட்ரோன் தாக்குதல், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதே போல உக்ரைன் இதுவரை இல்லாத அளவிற்கு மிக தீவிரமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய தரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒரே இரவில் உக்ரைன் ஏவிய 347 ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கும் தகவல்களின்படி, மாஸ்கோ உட்பட 20-க்கும் மேற்பட்ட ரஷ்யப் பகுதிகளை நோக்கி வந்த உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா நடத்திய முழுமையான படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நடத்தி இருக்கும் இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். இதற்கு முந்தைய மிகப்பெரிய தாக்குதல், கடந்த மார்ச் மாதம் ரஷ்யா 389 ஆளில்லா விமானங்களை ஏவியபோது நடந்தது.
அதே நேரம் ரஷ்யா தங்கள் நாட்டின் எரிசக்தி மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்கி இருப்பதாக உக்ரின் கூறி உள்ளது. ரஷ்யா ஒரே இரவில் 102 ஆளில்லா விமானங்களை (ஷாஹெட், கெர்பெரா மற்றும் இடல்மாஸ் வகைகள்) ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்தது. இவற்றில் 92 ட்ரோன்களை உக்ரைனியப் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்யாவின் வெற்றி நாள் கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதாலும், அமெரிக்கா தலைமையிலான சமாதான முயற்சிகள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததாலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

