பஞ்சப்பூரில் 7 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையிலான போலீசார் பஞ்சப்பூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பஞ்சப்பூர் பஸ் நிலையம் அண்ணா லாரி டெர்மினல் கழிவுநீரேற்று நிலையம் அருகில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பாஊரணி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது
திருச்சி பாலக்கரை போலீஸ் சரகம் காஜா பேட்டை பொதுக்கழிப்பிடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது காஜா பேட்டை பொதுக்கழிப்பிடம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மனைவி நபிஷா பேகம் (62) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம், துறையூர் காமாட்சிபுரம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகன் கவின் குமார் (21). இவர் துறையூர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கவின் குமார் கடந்த சில மாதங்களாக
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.இருப்பினும் வயிற்று வலியில் இருந்து முழுமையாக விடுபட இயலவில்லை இதனால் மனம் உடைந்த அவர், கடந்த 22 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கவின் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மகேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிங்கப்பூரிலிருந்து வந்தவரை காரில் கடத்தி, தாக்கி நகை பணம் பறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (47). இவர் சிங்கப்பூரில் வெல்டர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 24-ந்தேதி நள்ளிரவு இவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து உள்ளார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மர்மநபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது பெரியசாமியை தாக்கி, அவரிடம் இருந்த 1.5 லட்சம் மற்றும் 16 கிராம் தங்கச் செயினை பறித்துவிட்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பெரியசாமி திருச்சி விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யாரேனும் அவரை பின் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.
