Skip to content

உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும்   என பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி  வந்தது.

முன்னதாக நேற்று இச்சட்டம் குறித்து உத்தராகண்ட் முதல்வரின் செயலாளர் சைலேஷ் பகோலி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தராகண்ட் வருகிறார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.  முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதனை தொடங்கி வைக்கிறார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெற உள்ளது” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த சட்டம் அமலாவது இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் திருமணம், லிவ்-இன் உறவு சார்ந்து சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி திருமண வயது இருபாலருக்கும் 21 என ஆக்கப்படுகிறது. இதன்மூலம் முறையாக கல்வி பயின்று வேலை பெறுவதற்கு முன்னர் திருமணங்கள் செய்து கொள்வதும் குறையும் என அரசு கூறுகிறது. அதேபோல் அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் லிவ்-இன் உறவில் இருப்போர் 21-வது வயதுக்குக் கீழ் உள்ளவராக இருந்தால் அவர்கள் பெற்றோர் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். லிவ்-இன் உறவையும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் தெரிவித்தால் 3 மாதம் சிறை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இந்த இரண்டுமே விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி இச்சட்டம் குறித்து கூறுகையில், “பொது சிவில் சட்டத்துக்கு ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், மிக முக்கியமான முன்னோடி திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தும் விதமாக அதனை உத்தராகண்டில் அமல் படுத்தியுள்ளீர்கள். பொது சிவில் சட்டம் என்பதிலேயே பொது என்ற வார்த்தை இருக்கிறது. அப்படியென்றால் அதை பொதுவாக இந்தியா முழுமைக்கும் தான் அமல்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அது எப்படி பொது சிவில் சட்டம் ஆகும்” என்று பாஜகவை விமர்சித்து, பல்வேறு கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

 

 

error: Content is protected !!