ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலோச்சிய நடிகைதான் சௌகார் ஜானகி. ‘வளையாபதி’ என்கிற படத்தில் 1952-ல் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றிவிழா, ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படம் தமிழில் சௌகார் ஜானகி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம். அவரின் சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இதற்கிடையே, வயது மூப்பு காரணமாக தற்போது சினிமாவில் நடிப்பதில்லை. 94 வயதாகும் அவருக்கு சில தினங்கள் முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக பேசிய அவரது குடும்பத்தினர், தொடர் சிகிச்சை அளித்தும் சௌகார் ஜானகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சௌகார் ஜானகி காலமானார்.
ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகியின் தந்தை ஒரு மில் அதிபர். அதன் காரணமாக பல்வேறு இடங்களில் வசித்தது அவரது குடும்பம். சென்னையில் வசித்தபோது சாரதா வித்யாலயாவில் படித்த சௌகார் ஜானகி குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சி, நாடகங்களில் பங்கேற்றார்.
இதனை கேட்ட சினிமா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி ஒரு படத்தில் நடிக்க ஜானகியை அழைத்தார். நடிக்க வைப்பதில் விருப்பம் இல்லாத அவரது பெற்றோர் உறவுக்காரப் பையனுக்கு ஜானகியை திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பின் கணவருடன் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு வந்த பின் சினிமா ஆசை துளிர்த்ததால் சிறுவயதில் சினிமாவுக்கு அழைத்த தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். அவர் தனது தம்பி நாகிரெட்டியிடம் சிபாரிசு செய்ய விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். ஜானகியின் நடிப்பும் இயல்பாக இருக்க ரசிகர்களை எளிதாக கவர ‘சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட தொடங்கினார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
