தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். அரியலூர் சட்டமன்ற தொகுதியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரன், அரியலூர் நகரில் இன்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அரியலூர் நகரில் உள்ள கோசி நகர், கள்ளக்குடி தெரு, மேலத்தெரு, மின்னகர், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வருகை தந்த தாமரை. ராஜேந்திரனுக்கு போட்டி போட்டு கொண்டு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் ஆண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதன பெட்டி வழங்கப்படும், அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறியும், கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்று, தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது, அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு செய்த நலத்திட்டங்களையும், தான் தொடங்கிய, திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும், மீண்டும் தன்னை வெற்றி பெறச் செய்து, தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்தால், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு தான் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் பொது மக்களிடம் கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தாமரை ராஜேந்திரன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

