விளாத்திகுளம்: முதல்வர் ஜோசப் விஜய் குறித்து விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போலீஸ் ஜீப்பை மறித்து மறியலில் ஈடுபட்டனர். கைதை கண்டித்து தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், கடந்த 18ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது. கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தவெகவினர், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால் புகார் எதுவும் அளிக்காமல் திரும்பச் சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீசார், நேற்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏ வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் காலை நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம் கைது செய்ய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு ஏராளமான திமுகவினர் திரண்டனர். அவர், காரில் ஏற முயன்றபோது, போலீசார் தடுத்து தங்களது வாகனத்தில் ஏறும்படி கூறினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டவாறு போலீஸ் வாகனங்களை மறித்து தரையில் அமர்ந்தனர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி விட்டு மார்க்கண்டேயன் எம்எல்ஏவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீசார், மார்க்கண்டேயன் எம்எல்ஏவை தூத்துக்குடியில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தலைமையிடத்து ஏடிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
எம்எல்ஏ கைது செய்யப்பட்டதை அறிந்து எஸ்பி அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான திமுகவினர் திரண்டனர். இதனால் அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வழியாக கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் எம்எல்ஏ மீது பி.என்.எஸ் 351/3, 352/ 353/3 ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை காலை முதல் எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தகவலறிந்து முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி அப்துல்வஹாப் எம்எல்ஏ உள்ளிட்டோர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அங்கு குவிந்திருந்த தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராகவும், தவெக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு: மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மார்க்கண்டேயன் எம்எல்ஏ, தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு வழக்கறிஞர்களும், மார்க்கண்டேயன் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் சுமதி, மார்க்கண்டேயன் எம்எல்ஏவை ஆக.3ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி – பாளை. தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தொண்டர்களுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அப்போது தவெக அரசின் அடக்குமுறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கீதாஜீவன், கருணாநிதி எம்எல்ஏ உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டு மடத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
* துப்பாக்கிமுனையில் போலீசார் மிரட்டியதாக எம்எல்ஏ குற்றச்சாட்டு
மார்க்கண்டேயன் எம்எல்ஏவை காலை 7 மணிக்கு கைது செய்த போலீசார், 9 மணியளவில் தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு இரவு 7 மணி வரை 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு பின்னர் மார்க்கண்டேயன் எம்எல்ஏவை கூடுதல் எஸ்பி தீபு தலைமையிலான போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரசு மருத்துவமனைக்கு வந்தபோது பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். இதனால் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி அளிப்பதை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அழைத்து சென்றனர். மருத்துவமனை உள்ளே வந்ததும் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, ‘‘என்னை போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். என்னை மிரட்டி மார்ச்சுவரிக்கு கொண்டு சென்று தாக்க நினைக்கிறார்கள்” என்று சத்தம் போட்டார். தொடர்ந்து அவரை பேச விடாமல் போலீசார் உள்ளே இழுத்து சென்றனர்.
* இரண்டாவது எம்எல்ஏ
திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் கடந்த ஜூன் 20ம் தேதி நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின்பேரில் கடந்த 3ம் தேதி ஆறுமுகநேரி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது முதல்வர் ஜோசப் விஜய்யை விமர்சித்ததாக மார்க்கண்டேயன் எம்எல்ஏவை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 2 திமுக எம்எல்ஏக்கள் கைது ெசய்யப்பட்டு உள்ளனர்.
* அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மயக்கம்
மார்க்கண்டேன் எம்எல்ஏ கைதை கண்டித்து எஸ்பி அலுவலகம் முன்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை போலீசார் வலுக்கட்டாயமாக இழுக்க முயன்றனர். இதனை தடுத்த தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் தங்கத்துரை ஆகியோரை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த தள்ளுமுள்ளுவால் அனிதா ராதாகிருஷ்ணன் மயக்கமடைந்தார். அவரை எம்எல்ஏ அப்துல்வஹாப் காரில் அழைத்துச் சென்றார்.
* பத்திரிகையாளர்களை மிரட்டிய ஏடிஎஸ்பி
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவரை பேச விடாமல் போலீசார் உள்ளே இழுத்து சென்றனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திபுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்களை அவதூறான வார்த்தைகளால் போலீசார் பேசியதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
* தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் பாடம் புகட்டப்படும்: கனிமொழி எம்பி எச்சரிக்கை
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்க்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* முதல்வர் என்ன மொழியில் பேசினாரோ அதேமொழியில் மார்க்கண்டேயன் பதில்: முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து
முன்னாள் சபாநாயகர் அப்பாவு நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: சிஎம் சார் நீங்களோ மாண்பு நிறைந்த சட்டப்பேரவையில் உங்கள் அப்பாவை எங்கே காணோம்? என்று நையாண்டி செய்கிறீர்கள். ஐந்து நிமிடம் பேச்சில் முன்னாள் முதல்வரை கொத்து பரோட்டா போட்டுவிட்டேன் என்று கொக்கரிக்கிறீர்கள். ஆதாரம் இன்றி பார்ட்டி பண்ட் என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள். கரூர் பொதுக்கூட்டத்திலே ஓடு ஓடு ஓடு ஓடு என்று அங்க அசைவுடன் பாட்டு பாடி இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்கள். நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் பதில் தந்துள்ளார் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
எங்களை சட்டமன்றத்திற்குள் பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால் எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்? என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார். முட்டாள் முதல்வரே என்று பேசியவர்க்கும், தம்பி குடும்பத்தை வீடு புகுந்து தாக்கியவருக்கும், லட்சக்கணக்கானவர்கள் திரண்ட மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், உங்கள் கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்கட்சியினருக்கு ஒரு நியாயமா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
