காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க மே 7ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பெரும் வெள்ளத்தை தாங்கி கொள்ளலாம், வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?தமிழக மக்களின் வளங்கள் மட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்படுகிறது. ஒரே நாடு என பேசும் கட்சிகள் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா பக்கம் நிற்கின்றன. குறுவை சாகுபடி குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
