மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை சார்பில் வெப்ப அபாய மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது . இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையின் கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,
வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் , தொழிற்சாலைத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் இரவு நேரப் பணியாளர்களைப் பாதுகாப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதா தெரிவித்தார். பேரிடர் மற்றும் வெப்பப் பாதிப்பு காலங்களில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பருவமழை மற்றும் காலநிலை நிலவரங்களை உடனுக்குடன் கணித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க, பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் புதிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை குறைவு காரணமாக எழுந்துள்ள நீர் பற்றாக்குறையைக் சமாளிக்கவும், கால்நடைகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராமநாதபுரம், விருதுநகர் போன்ற அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்களின் சூழலுக்கு ஏற்ப தனிப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்குச் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறினார்.
“காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் மேகதாதுவில் கர்நாடகா ஒரு செங்கல் கூட எடுத்து வைப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்காது” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து அதிவேகமாக மேற்கொண்டு வருகின்றதாக்கவும் இன்னும் இரு மாதங்களில் பணிகள் முழுமைபெறும் என்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் எங்களை பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்படுவதில் உறுதியாக உள்ளதாக கூறினார் மேலும் கரூர் கூற்று நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசுப்பணி ரத்து செய்தது தொடர்பான கேள்விக்கு பரிசீலனை செய்யப்படும் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து சிரித்தபடி சென்றார்.
