மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்; இது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு – எம்பி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி.
காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி பிரவீன் சக்கரவர்த்தி, திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் உரையாடும் வகையில் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவில் முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், வரும் அக்டோபர் 10ம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரங்கள் வட மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஏப்ரல் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என, நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கோரிக்கை வைத்தோம். கடந்த வருடத்தில் ராகுல் காந்தி ஓட்டு திருட்டு குறித்து மூன்று முறை பிரஸ்மீட் வைத்து விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற ஓட்டு திருட்டு கண்டிக்கத்தக்கது. இதனால் இந்தியா ஜனநாயக நாடு என்ற பெருமையே போய்விட்டது.
இந்தியாவில் யுபிஐ இலவசமாக இருப்பது அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் அழுத்தத்தின் காரணமாகவே ஒன்றிய அரசு யுபிஐ பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடி இந்தியாவிற்கு தான் பிரதமர், அமெரிக்காவிற்கு அல்ல. இந்த வரி விதிப்பின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 30,000 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் மட்டும் 2,000 கோடி ரூபாயும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
ஜெம் வீரமணி விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார், நவம்பர் 2024 ஆம் ஆண்டு அப்போதைய கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் கேள்வி.
எஸ்.ஐ.ஆர் குளறுபடியினால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர்:- முதலில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும். அவரால் இந்தியாவிற்கு அவமானம். இதற்கு முன்னாள் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் மகாராஷ்டிராவில் ஓட்டு திருட்டு நடந்தது. அவர் தற்போது ஓய்வு பெற்ற பின்னர் மிகப்பெரிய தனியார் வங்கியில் சேர்மன் ஆக உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்திற்கு நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அமைச்சரிடம் நான் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்திற்குரிய காவிரி நீரை நிச்சயமாகப் பெற வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கட்ட விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
