வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய தமனியான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து ஈரான் தனது கட்டுப்பாட்டின் கீழ் இந்த நீர்வழியை மூடியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதோடு, அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலை (Midterm elections) எதிர்கொள்ளும் குடியரசுக் கட்சிக்கும் இது கடுமையான அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டைத் தக்கவைப்பது குறித்து ஓமன் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாகத் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈரானின் கடற்கரை வடபுறத்திலும், ஓமன் தென்புறத்திலும் அமைந்துள்ளதால் இந்த நீர்வழியின் எதிர்காலப் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிடத் திட்டமிட்டன.
இந்நிலையில், ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையாளர் ட்ரே யிங்ஸ்டிடம் (Trey Yingst) பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஓமன் நாட்டைக் கடுமையாக எச்சரித்தார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் எட்டப்பட உள்ள ஒப்பந்தத்திற்கு ஓமன் ஒருவேளை “தடையாக நின்றால், நாங்கள் அவர்களைத் தாக்கித் தீர்த்துக்கட்டுவோம்” என்று கடுமையான தொனியில் எச்சரித்தார். அமெரிக்காவின் நெருங்கிய வளைகுடா கூட்டாளியான ஓமன், டிரம்பின் இந்த அதிரடியான மிரட்டலுக்கு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான பதிலும் அளிக்கவில்லை.
மேலும், முன்னதாக பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் முறிந்துபோனதையடுத்து, மோதல் மீண்டும் தீவிரமடைந்தது. இந்தச் சூழலில், ஈரான் “வெள்ளைக் கொடியை ஏந்திச் சரணடைய வேண்டும்” என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினருடன் (Revolutionary Guard) தனது நிர்வாகம் நேரடிப் பின்னடைவுப் பேச்சுவார்த்தைகளில் (Back-channel talks) ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், “அவர்கள் நல்ல போக்கர் ஆட்டக்காரர்கள் தான், ஆனால் தற்போது அவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
