திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் திமுக போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழகத்தின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது. தமிழகத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; சுப்ரீம்கோர்ட்டில் வாய்பொத்தி நின்ற தமிழக அரசு வழக்கறிஞர்கள்.
தமிழக அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன? அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா? தமிழகத்துக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்? கடந்த மே 29ம் தேதி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு டாக்டர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழகத்தில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு டாக்டர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழக மக்களின் உயிர்ப்பிரச்னை இது. தவெக அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு டாக்டர்களுக்கும், மக்களுக்கும் அளித்தாக வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
