பெங்களூரு நகர குடிநீர் தேவை மற்றும் 400 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக 64 டிஎம்சி கொள்ளளவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில், மேகதாதுவில் புதிதாக அணையை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக, சுமார் 8.90 லட்சம் (9 லட்சம்) மரங்களை வெட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நீர் ஆணையம் (CWC) முன்னதாக கர்நாடாக அரசு அனுப்பிய மேகதாது திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது. இதனை தொடர்ந்து அந்த திட்ட அறிக்கையில் திருத்தங்கள் செய்து கர்நாடக அரசு புதிய விரிவான திட்ட வரைவு அறிக்கையாக (DPR) மீண்டும் ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. கர்நாடகாவின் இந்த புதிய திட்ட அறிக்கையில் தான் காடுகளை அழிப்பது தொடர்பான அதிர்ச்சியூட்டும் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
கர்நாடகாவின் அந்த அறிக்கையில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்காக சுமார் 12,500 ஏக்கர் வனப்பகுதி முழுமையாக அழிக்கப்பட உள்ள தகவல் இடம்பெற்றிருக்கிறது. அணை அமைய உள்ள பகுதியில் உள்ள மொத்தம் 8.90 லட்சம் மரங்கள் வெட்டி அகற்றப்படும் என்று கர்நாடகா தகவல் தெரிவித்துள்ளது. இதில் வெட்டப்பட்டு அகற்றப்பட உள்ள சுமார் 7 லட்சம் மரங்கள் சிறியவை என்றும், 1 லட்சம் மரங்கள் 50 முதல் 90 ஆண்டுகள் வரை பழமையான பெரிய மரங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அணை கட்ட இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டாலும், இதற்கு ஈடாக தட்சிண கன்னடா மற்றும் ஷிவமோகா ஆகிய பகுதிகளில் புதிய மரங்கள் நடப்படும் எனவும் கர்நாடகா தகவல் தெரிவித்துள்ளது.
