Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் மீது டூவீலர் மோதி பலி.. திருச்சி க்ரைம்

நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, கல்லக்குடி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சசிகலா (வயது 55). இவர் சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லகம் சுங்கச்சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கல்லக்குடியை சேர்ந்த ராமன் மகன் அர்ஜுன் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக சசிகலா மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சசிகலாவின் மகன் கண்ணன் அளித்த புகாரின் பேரில், கல்லக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த மூதாட்டி மூழ்கி பலி


திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, கங்கனிப்பட்டி அம்பலகாரர் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 78). வயது முதிர்வு காரணமாக இவருக்குக் கண் பார்வை குறைபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த செல்லம்மாள் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே, அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் செல்லம்மாள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. கண் பார்வை சரியாகத் தெரியாததால் அவர் தற்செயலாகக் கிணற்றில் விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் இருந்து செல்லம்மாளின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து அவரது மகன் முருகேசன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகையிலை விற்ற 2 பேர் கைது


திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக சமயபுரம் காவல் நிலைய போலீசாருக்கு மாடாகுடி ராசையா கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்றுக்கொண்டிருந்த லால்குடி தாலுகா, மாடாகுடி பகுதியைச் சேர்ந்த கௌரி (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 8 ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், நவல்பட்டு காவல் நிலைய போலீசார் எம்.ஐ.இ.டி சோதனைச் சாவடி அருகே தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த திருச்சி கே.கே. நகர் காந்தி நகரைச் சேர்ந்த தீபன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 4 ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!