சிட்னி : பாண்டி பீச் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தைரியமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அகமதை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிதாரியை தாக்கி ஆயுதத்தை பறித்த அகமதுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். “அகமத், நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ. மற்றவர்களைக் காப்பாற்ற உங்கள் உயிரைப் பணயம் வைத்தீர்கள். ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் சார்பாகவும் நன்றி” என்று பிரதமர் கூறினார்.
அகமது அல்-அகமது சிரிய வம்சாவளியைச் சேர்ந்த 43 வயது பழக்கடை உரிமையாளர். தாக்குதலின் போது இரண்டு முறை சுடப்பட்டு காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது என்று அதிகாரிகள் பாராட்டினர். பிரதமரின் நேரடி சந்திப்பு அகமதுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.இந்த சம்பவம் யூத சமூகத்தை இலக்கு வைத்த தீவிரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
அகமதின் செயல் மத நல்லிணக்கத்தின் சின்னமாக போற்றப்படுகிறது. முஸ்லிம் அகமது யூத கொண்டாட்டத்தில் உயிர்களை காப்பாற்றியது உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.பிரதமர் அல்பனீஸ் தனது எக்ஸ் பதிவில் அகமதை ஹீரோ என்று அழைத்து நன்றி தெரிவித்தார். “இது ஆஸ்திரேலிய ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. வெறுப்புக்கு இங்கு இடமில்லை” என்று கூறினார்.
அகமதின் உடல்நலம் விரைவில் தேற வேண்டும் என்று உலகம் வாழ்த்துகிறது.இந்த சந்திப்பு ஆஸ்திரேலியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளது. அகமதின் தைரியம் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது. தாக்குதல் விசாரணை தொடர்கிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

