பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் 13வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் முருகன் (46), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் நிவேதா (19), யோகேஷ் (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான முருகன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் நிவேதா தனது குழந்தைகளுடன் மதுராந்தகத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து, முருகன் தான் வசித்து வந்த வீட்டை லீசுக்கு விட்டு, ஆட்டோவிலே தங்கி இருந்தார். அத்தியாவசிய தேவைகளுக்கு வியாசர்பாடி ஏரிக்கரை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனது அக்கா மாலா என்பவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு 11 மணியளவில் மாலாவின் மகன் பவித்ரன் (32), மது போதையில் தனது தாய் மாமாவான முருகனை பார்க்க புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, முருகன் ஆட்டோவில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட பவித்ரன், தனக்கும் சரக்கு வேண்டும், என்று தனது மாமா முருகனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு முருகன், தன்னிடம் மது குறைவாக உள்ளதாக கூறி சரக்கு தர மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன், முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மயங்கிய முருகனை, அவரது ஆட்டோவில் படுக்க வைத்து, தனது வீட்டிற்கு அழைத்து சென்று, மாமாவை யாரோ தாக்கிவிட்டதாக தாயிடம் கூறியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாலா, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முருகனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு முருகனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மாலா, தனது தம்பி முருகனை அடித்து கொன்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பேசின் பிரிட்ஜ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாலாவின் மகன் பவித்ரன் ஆட்டோவில் வைத்து முருகனை சரமாரியாக தாக்கிய காட்சிகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து, போலீசார் விசாரணையில், பவித்ரன் அடிக்கடி முருகனிடம் சரக்கு வாங்க பணம் வாங்கியுள்ளார். சம்பவத்தன்று பணம் மற்றும் சரக்கு கேட்டுள்ளார். முருகன் சரக்கு, பணம் கொடுக்க மறுத்ததால் மதுபோதையில் இருந்த பவித்ரன் ஆத்திரமடைந்து தாக்கியது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார், வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பவித்ரனை நேற்று கைது செய்து விசாரித்தனர். அதில், பவித்ரன் லோடு தூக்கும் கூலி வேலை செய்து வருவதும். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். பவித்ரன் குடி போதைக்கு அடிமையானதால் புவனேஸ்வரி, பவித்ரனை விட்டு பிரிந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பவித்ரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
