Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

ராஜபாளையம்: போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகாரளித்தவரின் உடன் சென்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டரின் அலட்சியமே வாலிபரின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், ​தளவாய்புரத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவர், ஊரில் உள்ள பஜாரில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகன் மணிகண்டன் (22), தந்தையுடன் கடையில் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காமராஜர் நகர் பகுதியில், மணிகண்டனின் அத்தை முத்துமாரி என்பவரின் வீட்டின் முன் சிலர் கஞ்சா மற்றும் மது போதையில் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை முத்துமாரி தட்டிக் கேட்டதால், அவருக்கும் போதைக் கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தளவாய்புரம் காவல்நிலையத்தில் முத்துமாரி புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டர், ‘காலையில் வந்து விரிவாகப் புகார் எழுதி கொடுங்கள் என திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையறிந்த போதைக் கும்பலைச் சேர்ந்த பாண்டி, இளையராஜா, தங்கையா, ஈஸ்வரன், மாணிக்கம் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை 3 மணியளவில் முத்துமாரியின் வீட்டுக்கு சென்று கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தளவாய்புரம் போலீசாருக்கு போன் மூலம் முத்துமாரி தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து, முத்துமாரியை காலையில் வந்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை தளவாய்புரம் காவல்நிலையத்துக்கு சென்ற மணிகண்டன், முத்துமாரி ஆகியோரை மதியம் 2 மணி வரை காக்க வைத்த இன்ஸ்பெக்டர், இருதரப்பும் மீது வழக்குப்பதிவு செய்கிறேன். நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி புகாரை பெற்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதைக் கும்பலைச் சேர்ந்த ஈஸ்வரன் (35), மாணிக்கம் (26) ஆகியோர் நேற்று மாலை கடையில் இருந்த மணிகண்டனை, கடைக்குள் புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், கடையில் இருந்தவரை வெளியே இழுத்து வந்து மீண்டும் குத்திவிட்டு தப்பியோடினர். இதில், பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். ஆனால், குடும்பத்தினர் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மணிகண்டனின் உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முத்துமாரி கூறுகையில், ‘தளவாய்புரம் இன்ஸ்பெக்டரின் அலட்சியமே மணிகண்டனின் உயிரிழப்புக்கு காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

போதைக் கும்பல் குறித்து போலீசாரிடம் புகாரளித்தவருடன் சென்ற வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் காமராஜர் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!