வள்ளியூர் அருகே வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த வடக்கன்குளம் பகுதியில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் பாக்சிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கவ்ரங்க ராய் என்பவரின் மகன் சூர்ஜா தேவ்ராய் (27) என்பவர் அங்குள்ள குவாரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த சூர்ஜா, அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கதவு திறந்திருப்பதைக்கண்டு உள்ளே நுழைந்த அவர், அங்கு இருந்த சிறுமியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் கேட்டதைத் தொடர்ந்து, அச்சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி சத்தம்போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். ஆட்களைக் கண்டதும் சூர்ஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சூர்ஜா அப்பகுதியில் சுற்றித் திரிந்தது உறுதியானதை அடுத்து, அவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
