திருப்பூரில் வடமாநில இளைஞர் மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டு தூய்மைப் பணியாளரான முகுந்த் என்பவர், நேற்று இரவு செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். தொடர்ந்து அவர் மது போதையில் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் முகுந்திடம் ஹிந்தியில் பீடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முகுந்த் தர மறுத்ததைத் தொடர்ந்து, அந்த வடமாநில வாலிபர் அவரை ஹிந்தியில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த முகுந்த், அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்று தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின்னர் அருகில் இருந்த பெரிய கல்லைத் தூக்கி அவரது தலையில் போட்டுப் படுகொலை செய்துள்ளார்.
இது தொடர்பாகத் தகவல் அறிந்து வந்த 15-வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொலை செய்த முகுந்தைக் கைது செய்துள்ளனர். மேலும், படுகொலை செய்யப்பட்ட வடமாநில வாலிபர் யார் என்றும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
