சுற்றுலா பஸ் மோதி வாலிபர் சாவு
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 37). இவர் திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீனிவாசா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் நேற்று நள்ளிரவு புதுக்கோட்டை – திருச்சி சாலையில் உள்ள மத்திய சிறை எதிரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்
திருச்சி ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கடந்த 16-ந்தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பெயரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ராம்ஜிநகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் என்பவர் வீட்டில் 1700 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிரசாந்த், மாலினி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கடந்த 16-ந்தேதி கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த திருச்சி வீரரேஸ்வரம் கீழ தெருவை சேர்ந்த விஷால் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள், ஒரு வாட்டர் பாட்டில், ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் காந்தி மார்க்கெட் மணிமண்டபம் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது25) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 5 போதை மாத்திரைகள், இரண்டு ஊசிகள், ஒரு வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் கடந்த 12-ந் தேதி ஓயாமரி சாலையில் உள்ள மதுபான கடையின் நுழைவு வாயிலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதே போல் திருச்சி லால்குடி ஆங்கரை பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது45 )என்பவர் தேவதானம் சாலை சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் எதிரே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
