திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி (வயது 25) என்ற வாலிபார் சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போனாதாக உறவினர்கள் தேடி வந்ததார். அவர் மனநலம் குன்றியவர் என சொல்லப்படுகிறது. குவாரியில் சென்றுகேட்டபோது இங்கெல்லாம் வரவில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 22) குவாரியில் எம். சாண்ட் குவித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தரைப்பகுதியிலிருந்து 10 அடி ஆழத்தில் கருப்பசாமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், நத்தம் காவல்ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, கருப்பசாமியின் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கருப்பசாமியின் உடல் எப்படி கல்குவாரிக்குள் வந்தது? கல்குவாரியில்தான் அவர் இறந்தாரா? இறப்பின் பின்னணியில் ஏதேனும் காரணம் இருக்கிறதா? கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் தற்செயலாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்றார்களா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
