திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தெரு அருகே கல்லுக்கார தெரு உள்ளது. இப்பகுதியில் நேற்று இரவு சில இளைஞர்கள் குழுவாக அமர்ந்து கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வழியாகச் சென்ற ஓட்டுநர் பாலாஜி, அவர்களின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பொது இடத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது எனத் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கஞ்சா போதையில் பாலாஜியைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். அங்கிருந்து பாலாஜி தப்பிக்க முயன்றாலும், அவரை விடாமல் துரத்திச் சென்று, கையில் வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளனர். மேலும், கற்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலாஜி, வலியையும் பொருட்படுத்தாமல் உயிருக்குப் பயந்து ஓடிச் சென்று பாலக்கரை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். அவரது நிலையைப் பார்த்த காவல்துறையினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாலக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த பாலாஜி இன்று சிகிச்சையின் தொடர்ச்சியாக மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதுகுறித்து பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் கூறுகையில், பொது இடத்தில் கஞ்சா பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதற்காகவே இக்கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும் என திருச்சி காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
