1.தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளை தான் போட்டியிட தேர்ந்தெடுக்க காரணம் அங்குள்ள சிறுபான்மை ஓட்டுகள். ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் திமுக கூட்டணியில் இருக்கின்றன. கிறிஸ்தவ அமைப்புகள் வெளிப்படையாக திமுகவை ஆதரிப்பதாக அறிவித்து விட்டன. சில கிறிஸ்தவ அமைப்புகள் தீவிரமாக விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன. விஜய்க்கு சிறுபான்மை ஓட்டுகள் கிடைப்பதை இந்த நடவடிக்கைகள் உறுதியாக பாதிக்கும்.
2.சொல்லிக் கொள்ளும் படியாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பெரம்பூரில் பிரச்சாரம் செய்யவில்லை. தேர்தல் அலுவலகமே காற்று வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. விசில் கோலம் போட சொன்னதை கூட ஆக்டிவாக செய்ய முடியாத நிலையில் தான் அவர் கட்சி பெரம்பூரில் செயல்படுகிறது.
3.ஆர் டி சேகர் உள்ளூர்காரர், விஜய் வெளியூர்க்காரர் எனும் பிரச்சாரம் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எடுபடும் என்று தோன்றுகிறது. அதற்குத் தகுந்தார் போல திமுக தரப்பு இந்த கோணத்தைத் தான் தங்களது பிரச்சாரத்தில் அதிகம் வலியுறுத்துகிறது.
4.பிற கட்சிகள் எல்லா வகையான பிரச்சாரங்களையும் தீவிரமாக மேற்கொள்ளும் போது த.வெ.க விஜய் பாட்டை ஆட்டோவில் ஒலிக்க விட்டபடி ஊரை சுற்றி வந்தால் போதும் என நம்புகிறது. அது பார்ப்பவர்கள் மத்தியில் கட்சி செயல்படாமல் இருக்கிறது எனும் தோற்றத்தை உருவாக்கி விட்டது.
5.விஜய் முகத்தை மட்டும் காட்டி வெற்றி பெற்று விடலாம் எனும் நம்பிக்கையில் அவர் கட்சி இருப்பது தமிழகம் முழுக்கவே வெளிப்படையாக தெரிகிறது. இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் எதிர்மறையாக வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது.
6.புதிய வாக்காளர்கள் வேண்டுமானால் விஜயை பார்த்து வைப் செய்யும் மனநிலையில் இருக்கலாம். பெரியவர்கள் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் தங்கள் வீடு தேடி வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் திமுக தொகுதியில் பல மடங்கு முன்னணியில் இருக்கிறது. விஜய் ரசிகர்களை தவிர பிறரை வாக்காளராக மாற்றுவதற்கு எந்தத் திட்டமும் அந்த கட்சியிடம் இருப்பது போல தெரியவில்லை.
7.ஓரிரு தேர்தல்களைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக 50% கை்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த தேர்தலில் வாக்கு வித்தியாசம் மட்டும் 50 ஆயிரம். இந்த வலுவான திமுக ஓட்டு வங்கியை சிதறடிக்க பிற கட்சிகளுக்கு அபாரமான பிரச்சார வழிமையும் கட்சி கட்டமைப்பும் தேவை. திமுகவை எதிர்த்துப் போட்டியிடும் இரண்டு கட்சிகளுக்கும் அந்த வலிமை இல்லை என்பது கண் கூடு.
8.இங்கேஆரம்பத்தில் திமுக சுணக்கமாக இருந்தது நிஜம். ஆனால் அவர்களிடம் வலிமையான தேர்தல் மேலாண்மை நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் தொடர்ச்சியாக தொகுதியின் பிரச்சனைகளை கண்டறிந்து விரைவாக அதனை சரி செய்ய முயற்சிக்கிறார்கள். தொகுதி பொறுப்பாளராக ஜோயல் நியமிக்கப்பட்டது முதல் நூற்றுக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் அங்கு களம் இறக்கப்பட்டது வரை ஏராளமான கோர்ஸ் கரெக்ஷன் வேலைகள் பெரம்பூரில் நடந்திருக்கின்றன. திமுகவினர் வார்டு வாரியாக வேலை செய்கிறார்கள், பல கட்ட மேற்பார்வை நடக்கிறது. விஜய் முகத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்கும் அவரது கட்சி இந்த கட்டமைப்பை எதிர்கொள்ள தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
9.தொகுதி குறித்த முழுமையான தரவுகள் திமுகவிடம் இருக்கிறது. யார் ஓட்டு போடுவார்கள்? யார் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற தெருவாரியான தரவுகள் அவர்கள் வசம் உண்டு. யாரை எப்படி வளைப்பது என்பதில் நீண்ட அனுபவம் கொண்ட கட்சி அது. இறுதி பத்து நாளில் களத்தை மொத்தமாக தன் பக்கம் திருப்ப இந்த தகவல்களும் அனுபவமும் போதுமானது. அது களத்தில் தெளிவாக தெரிகிறது.
10.கடைசி பிரச்சினை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட விரும்புவரிடம் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை. பெரம்பூரில் ஜெயிக்க மாட்டோம் என விஜய் நம்புவதால் தான் அங்கு பிரச்சாரம் செய்வதை அவர் தவிர்க்கிறார், திருச்சி கிழக்கு தொகுதியைத்தான் அவர் நம்பிக் கொண்டிருக்கிறார் எனும் திமுகவின் பிரச்சாரம் குறைந்த அளவுக்கேனும் தொகுதியில் எடுபட்டிருக்கிறது.
