Skip to content

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு சீரிய, சிறப்புமிக்க திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48, கலைஞரின் வருமுன் காப்போம், இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம் நடப்போம் நலம் பெறுவோம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிக்க திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம், மக்களை தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் என்று பல்வேறு திட்டங்களை இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்படுத்தி வருகிறார்.
கடந்த மாதம் கூட தமிழ்நாட்டில் உள்ள 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹியூமன் பாபிலோனா வேக்சின் என்கிற எச்.பி.வி. தடுப்பு ஊசியை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் மூலம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பை வாய்ப்புற்றுநோய் பாதிப்புகளை அறவே தடுக்க முடியும் என்கிற மகத்தான திட்டத்தை உலகத்திலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கி வைத்திருக்கிறார். அந்த திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறுகிற பள்ளிகளில் பயிலும் 14 வயது மாணவிகள் 3 லட்சத்து 38 ஆயிரத்து 649 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.
அதேபோல் உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகளுக்கான பிரத்தியேக மருத்துவமனை ஒன்று சென்னையில் ரூ. 417 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்ட மகத்தான திட்டம் நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி இதுவரை நடைபெற்று முடிந்திருக்கிற ஆயிரத்து 206 முகாம்களில் 17 லட்சத்து 83 ஆயிரத்து 415 பேர் பயனடைந்து உள்ளனர்.
இது ஏதோ சளி, காய்ச்சலுக்கு மருந்து தருகிற மருத்துவ முகாம் அல்ல. முழு உடன் பரிசோதனை என்கின்ற வகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகும். இந்த பரிசோதனைகள் இங்கே விலையில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முகாம்களுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மேலும் இம்முகாம்களில் 47 ஆயிரத்து 970 காப்பீட்டு திட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் 58 ஆயிரத்து 673 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை பொறுத்தவரை பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம் எலும்பியல் மருத்துவம் நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகளிர் மருத்துவம் கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்க மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் என்று 17 வகையான மருத்துவ முறைகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

error: Content is protected !!