சமூக வலைதளங்களில் இளைஞர்களை பாதிக்கும் வகையிலான ஆபாச சைகைகள் அடங்கிய வீடியோக்களை பதிவிட்டு, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் வழக்கறிஞர் அஜித் சாக்கோ அளித்த புகாரில், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளம் வயதினரை பாதிக்கும் வகையிலான ஆபாச சைகைகள் மற்றும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், இதன் மூலம் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லும் சூழல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோர் மீது நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வழக்கறிஞர் அஜித் சாக்கோ தலைமையில் வழக்கறிஞர்கள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சமூக வலைதளங்களில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலான ஆபாச வீடியோக்களை பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், இதுபோன்ற சமூக வலைதள கணக்குகளை முடக்கவும், சமூக வலைதளங்களில் பதிவாகும் இதுபோன்ற உள்ளடக்கங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக திரைப்பட நடிகைகள் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் புகார் அளிக்க உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் மனுவை பெற்ற சைபர் கிரைம் போலீசார், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது தொழில் நுட்பப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `சமூக வலைதளங்களில் மிகவும் ஆபாசமாக பேசி, இளைஞர்களை சீரழித்து வருவதாக கிடைத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.
