Skip to content

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்கள் பாகிஸ்தானுக்குக் கசிந்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து அந்தச் சிறுவனைப் பிடித்தனர். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனிடம் இருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அச்சிறுவன் இந்திய ராணுவத் தளவாடங்கள், முக்கியப் பாதுகாப்பு மையங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், உளவு அமைப்பிற்கும் அனுப்பி வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவனுக்குப் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பதன்கோட் எஸ்எஸ்பி தில்ஜிந்தர் சிங் தில்லான் கூறுகையில், “இந்தச் சிறுவன் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்துள்ளான். தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவன், மிக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளான். சரியான நேரத்தில் இவன் பிடிபடாமல் போயிருந்தால், நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பான்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களின் ஆன்லைன் வலையில் இதுபோல இன்னும் சில சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!