கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் ஜி ஜெயந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்றுவிட்டு, தற்போது நொய்யல் பகுதியில் உள்ள ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவன் ஜி ஜெயந்த், கடந்த சில நாட்களாகவே தனது பெற்றோரிடம் பாடம் படிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் ஜெயந்தின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விரக்தியில் இருந்த ஜெயந்த் தனது வீட்டின் மேற்கூரை கம்பியில் தாயின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டிற்கு வந்த ஜெயந்தின் பாட்டி வள்ளியம்மாள், பேரன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறினார். அக்கம் பக்கத்தினர் மற்றும் ஜெயந்தின் மாமா ராம்குமார் ஆகியோர் விரைந்து வந்து ஜெயந்தை மீட்டு, உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாய் காயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு உடலைப் பெற்றுச் சென்றனர்.படிப்புச் சுமையால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

