திருச்சி ரயில் நிலையத்தில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், காவல்துறையினர் நடத்திய சிறப்பு சோதனையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 22 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா IPS உத்தரவின்பேரில், சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
முதல் நிலைக் காவலர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் ரயில் நிலையம் முதல் திருச்சி வரை, வண்டி எண் 12642 திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு வந்தடைந்த ரயிலின் பின்புற பொதுப் பெட்டியில், இருக்கைக்கு அடியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு சாக்குப் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எதிரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
