விவசாயி ஜெகநாதன் படுகொலை வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவருக்கும் அவரது தோட்டத்திற்கு அருகே உள்ள குவாரி உரிமையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த 2022 ஆண்டு ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான குவாரி உரிமையாளர் செல்வகுமார்,ஓட்டுநர் சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
குற்றம் சாற்றப்பட்ட மூன்று நபர்களுக்கும் 2 ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் அபராதமும் கட்ட தவறினால் கூடுதலாக நான்கு வருடம் கடுங்காவல் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார்.
தொடர்ந்து மூன்று குற்றவாளிகளும் இன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
