Skip to content
Home » 30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18) திருமணமாகாமல் கர்ப்பமாகி உள்ளார். மஞ்சுளா தனது கர்ப்பத்திற்கு காரணமாக, மாற்று சமூகத்தை சேர்ந்த அன்புதுரை மீது, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அன்புதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் மார்ச் 29ம்தேதி மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் டி.என்.ஏ பரிசோதனை செய்து உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று, அன்புதுரை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயங்கொண்டம்

 

அனைத்து மகளிர் போலீசார், மஞ்சுளா மற்றும் அவரது பெண் குழந்தை ஆகியோரிடம் அங்க அடையாளங்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் திங்கட்கிழமை டி என் ஏ பரிசோதனை செய்ய உள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில், தாய் மஞ்சுளா, தனது அருகில் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டார்கள் என மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் வெளி ஆட்கள் யாரும் வரவில்லை என்பது உறுதியானது அடுத்து மஞ்சுளாவின் மீது சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் மஞ்சுளா வீட்டிற்கு அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கருவேல மரக்கிளைகள் வைக்கப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார், அப்பகுதியில் சோதனை செய்தனர். பின்னர் மஞ்சுளாவிடம் நடத்திய விசாரணையில் அவரே தனது குழந்தையை கொன்று வீட்டின் அருகே புதைத்ததாக கூறியுள்ளார். நேற்று ஜெயங்கொண்டம் தாசில்தார் முன்னிலையில், புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து

பச்சிளம் குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் தாயார் மஞ்சுளா, பாட்டி பரிமளா ஆகிய இருவர் மீதும் 363 IPC ஆள் கடத்தல், 302 IPC
கொலை, மற்றும் 201 IPC தடயங்களை மற்றும் சான்றுகளை அழித்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தினர். நீதிபதி 16.05.2024 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையிடம் இன்று டி.என்.ஏ பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிய வருகிறது.

பெற்ற குழந்தையை தானே கொலை செய்த நாடகமாடிய மஞ்சுளா, டி.என்.ஏ பரிசோதனைக்கு முன்பு தனது குழந்தையை கொன்றுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!