ஆயுத பூஜை, தசரா பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் உள்நாட்டு விமானக்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையே வழக்கமாக ரூ.7,201 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,363-ஆக உள்ளது.
அதே போல சென்னை – மதுரை இடையே வழக்கமாக ரூ.5,459 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.8,537-ஆக உள்ளது. சென்னை – திருச்சி இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.5,066-ஆக இருக்கும் நிலையில் இன்றைய கட்டணம் ரூ.9,896-ஆக உயர்ந்துள்ளது. அதே போல சென்னை – கோவை இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.5,373-ஆக இருந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.16,601-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – சேலம் இடையே வழக்கமாக ரூ.4,264 விமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.12,23-ஆக இருக்கிறது. அதே போல சென்னையிலிருந்து பெங்களூரு, ஐதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை, டெல்லி செல்லும் விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு அதிகரித்தே காணப்படுகிறது.
