கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு, இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை மற்றும் பூக்கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து பெய்த மழையால் கட்டிடத்தின் ஓரப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில், தடுப்புச் சுவர் மற்றும் கான்கிரீட் தளம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடைகள் மற்றும் வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும், சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பழமையான கட்டிடங்களின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் பாதிப்பு ஏற்படாத வகையில் இணைப்பை துண்டித்தனர்.
