விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிபவர் கோமதிவிநாயகம் (30). இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோ எடுத்த கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கிலும் வைரலாகப் பரவியது.
இதுதவிர, கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதிவிநாயகம் புகார் அளித்தார். அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடந்த 15-ம் தேதி பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதும் மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதியானது. அர்ச்சகர் கோமதிவிநாயகம் மற்றும் 3 உதவி அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாச நடனமாடும் வீடியோ வெளியானது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.