சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார்.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் முதல்வர் அறிவித்தார். “எஸ்.ஐ.ஆர். படிவத்தில் பெயர் அளித்தால்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் வரும்போது வீட்டில் இல்லையென்றால் வாக்குகள் இழக்கப்படும். ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர் கவலை தெரிவித்தார்.
“ஜனநாயகத்தைக் காக்க எந்தத் தியாகத்தையும் செய்ய திமுகவினர் தயாராக உள்ளனர்” என்று உருக்கமாகப் பேசிய மு.க. ஸ்டாலின், கட்சியினருக்கு உற்சாக ஊசி போட்டார். திமுகவின் அடித்தளம் மக்கள் என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சிகளின் சதி வேலைகளை முறியடிப்போம் என்று உறுதியளித்தார்.
இந்தப் பேச்சு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக வெற்றி பெரும் என்கிற உத்தியை வெளிப்படுத்தியுள்ளது. எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுகவின் தொடர் போராட்டங்கள் மக்கள் ஆதரவைத் திரட்டும் என கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. முதல்வரின் இந்த உரை சமூக வலைதளங்களில் வைரலாகி, திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

