Skip to content

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி…போலி நிர்வாக அதிகாரி கைது…

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவரிடம் திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த செய்யது அகமது கபிர்(41) என்பவர் ESIC மருத்துவமனையில், நிர்வாக அதிகாரியாக (Administrative Officer) ஆக வேலை செய்வதாக கூறி, கோபாலகிருஷ்ணனின் மகளுக்கு, ESIC மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து செய்யது அகமது கபிர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோபாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். அதன் பேரில், புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் கோபாலகிருஷ்ணன், செய்யது அகமது கபிர் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்ட விவரம் உண்மை என தெரிய வந்தது. அதன் பேரில் 14.10.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், செய்யது அகமது கபிர் என்பவரை இன்று (2.12.2025), மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர், தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம் மற்றும் கலையரசன் ஆகியோர் சேர்ந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றவாளியை சிறப்பாக செயல்பட்டு, கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

error: Content is protected !!