ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓவியக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வரும் துறை சார்ந்த ஓவியம் வரைதல், விளம்பரப் பலகை எழுதுதல் உள்ளிட்ட பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓவியர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் 120 ஓவியக் கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓவியக் கலையையே முழுமையாக நம்பி தங்களது குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இந்த 120 ஓவியர்களை சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் முழுவதும் ஓவியத் தொழில்மீதே தங்கியுள்ளது.
ஆனால், பிளக்ஸ் பிரிண்டிங் பயன்பாடு அதிகரித்ததாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் பாரம்பரிய ஓவியத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்புபோல் வேலை வாய்ப்புகள் கிடைக்காமல், போதிய வருமானம் இன்றி ஓவியர்கள் வாழ்வாதார சிக்கலில் சிக்கி வருகின்றனர்.
எனவே, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசாங்கத்தின் மூலம் வரும் துறை சார்ந்த விளம்பரப் பணிகள், ஓவியம் வரைதல், விளம்பரப் பலகை எழுதுதல், விழிப்புணர்வு ஓவியங்கள், அரசு விளம்பரப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து ஓவியச் சார்ந்த பணிகளையும் மாவட்டத்தில் உள்ள ஓவியக் கலைஞர்களுக்கே வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓவியக் கலைஞர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.

