Skip to content

பாஜக வேட்பாளரிடம் தோல்வி…காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சி.எம்.பி. கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.சினி 1,863 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் பா.ஜனதா வேட்பாளரிடம் 26 வாக்குகள் வித்தியாசத்தில் சினி தோல்வியடைந்தார். இந்த தோல்வியால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த வார்டில் சினி என்ற பெயரில் மேலும் 2 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்கு மொத்தம் 44 வாக்குகள் கிடைத்தன. இதுதான் சினியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த சினி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள். திடீர் மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று கூறினர். இந்தசம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!