Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எனது பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது… ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உள் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, “அன்புமணி இனிமேல் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் கிடையாது, அன்புமணி மட்டுமே. தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரிக்கவில்லை. அவர் தொடர்ந்து பாமக பெயர், சின்னத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று கடுமையாக விமர்சித்தார்.

“கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப்போல், பாமக என்னும் மரத்தில் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார்” என்று ராமதாஸ் ஆவேசமாகக் கூறினார். பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாகவும், அதனால் அவர் கட்சி பெயர், சின்னம், தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்தில் ராமதாஸ் தலைமையில் 22 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அன்புமணி தரப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை, கட்சி வளர்ச்சிப் பணிகள், வரும் தேர்தலில் தேசிய கட்சி அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த மாத இறுதியில் சேலம் தலைவாசலில் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது அன்புமணி தரப்புக்கு எதிரான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரித்திருந்தாலும், ராமதாஸ் தரப்பு அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த உள் மோதல், பாமகவின் 2026 தேர்தல் உத்திகளைப் பாதிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.பாமகவின் இந்த உள் பிளவு, வன்னியர் சமூக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் தரப்பு “கட்சியை அபகரிக்கும் முயற்சி” என்று குற்றம் சாட்ட, அன்புமணி தரப்பு “சட்டப்படி தலைமை என்னிடம்” என்று உறுதிப்படுத்துகிறது. இந்த மோதல், கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் சிக்கலாக்கியுள்ளது. ரசிகர்களும் அரசியல் ஆர்வலர்களும் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

error: Content is protected !!