தஞ்சாவூர் மாவட்டம் 8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடி வரையிலான ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி ரூ.4.45 கோடி மதிப்பில் 4.6 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் 8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் வரையிலான சாலை குறுகலாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்தது.
இந்த சாலை வழியாக இப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு உழவு எந்திர ,ம், அறுவடை எந்திரம் ஆகியவற்றை இந்த சாலை வழியாகத்தான் கொண்டு சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை இ்நத சாலையை இருவழிப்பாதையாக அகலப்படுத்த முடிவு செய்தது.
அதன்படி 8ம் நம்பர் கரம்பையில் இருந்து சிவகாமிபுரம் வரை தற்போது சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்த உடன் 8-ம் நம்பர் டவுன் கரம்பையில் இருந்து சிவகாமிபுரத்திலிருந்து ஆலக்குடியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் வரையிலான மொத்தம் 4.6 கி.மீ. நீளத்துக்கு ரூ.4 கோடியே 45 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2025-26) இந்த பணிகள் நடைபெற்று வருகிறது இந்த சாலை பணிகளின் நீளம் அகலம் மற்றும் தரம் குறித்து தஞ்சை (நெடுஞ்சாலைத்துறை) தரக் கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளர் ரேணுகோபால் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தஞ்சை உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் செல்வகுமார் மற்றும் லட்சுமி பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
