Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளியல் வரைபடத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்வது சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பட்டாசு உற்பத்தித் தொழிலே ஆகும். ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.6000 கோடி அளவில் வர்த்தகம் நடக்கும் இத்தொழிலை நம்பி ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்கின்றனர். நமது நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தப் பட்டாசுத் தொழிலும், அதனை நம்பியிருக்கும் மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களும், தொழிலாளர்களும் இன்று த.வெ.க. அரசின் தேவையற்ற கெடுபிடிகளினால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீதோ அல்லது பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்து சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் மீதோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை யாரும் தவறு என்று சொல்லப்போவதில்லை. மனித உயிர்களின் பாதுகாப்பும், விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அரசின் அனைத்துச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு, உரிய அரசுத் துறைகளிடம் நாக்பூர் உரிமம், மெட்ராஸ் உரிமம் மற்றும் பிற முறையான உரிமங்களைப் பெற்று, ஆண்டுதோறும் அவற்றை முறைப்படி புதுப்பித்துத் தொழில் நடத்திவரும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில், “அதிரடி ஆய்வு” என்ற பெயரில் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கடும் கண்டனத்திற்குரியவை.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இக்காலகட்டத்தில், பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கவிருக்கும் நேரத்தில், அதிகாரிகளின் இந்தத் தேவையற்ற அதிரடி சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பூர்வமாக வரி செலுத்தி, உரிமம் பெற்று வணிகம் செய்யும் வர்த்தகர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி, ஆய்வுகள் என்ற பெயரில் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம்? இந்தத் தொழிலில் பெருமளவில் கிராமப்புறப் பெண்களும், எளிய மக்களுமே ஈடுப்பட்டுள்ள நிலையில், அரசின் தேவையற்ற கெடுபிடிகளால் தொழிற்சாலைகளும் கடைகளும் முடங்கும்போது, அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. சிவகாசி மாநகரத்தின் வர்த்தகச் சங்கிலி அறுந்துபோனால், அது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் வர்த்தகச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் “ஆய்வு” என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் இந்த த.வெ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கும் அணுகுமுறையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எவ்வித அச்சமுமின்றித் தங்களது வணிகத்தைத் தொடரத் தேவையான சூழலை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!