சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
படத்தின் இன்டர்வல் பிளாக் ‘பாஸா ’ போன்ற உச்சத்தை தொடும் என்று கூறிய ஆகாஷ் பாஸ்கரன், “இன்டர்வல் பிளாக் பாஸா மொமெண்ட் போல இருக்கும். படத்தின் ஹைலைட் தருணங்களில் ஒன்றாக அமையும்” என்றார். மேலும், சிவகார்த்திகேயன் – ரவி மோகன் இடையேயான மோதல் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், மலையாளம் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்சார் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆகாஷ் பாஸ்கரன், “படத்தின் சென்சாரில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. ரிவைசிங் கமிட்டிக்கு சென்றோம். தொடக்கம் முதலே இந்த தலைப்பை தொடக்கூடாது என்று பலர் எதிர்த்தனர். ஆனால் இந்த பிரச்சனையை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு வந்த இந்த இயக்கத்தை இதுவரை யாரும் தொடவில்லை. முதல்முறையாக நாங்கள் தொடுகிறோம்” என்று கூறினார்.
பொங்கல் ரிலீஸ் குறித்து பேசிய அவர், “தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் படத்தை 4 நாட்கள் முன்பே வெளியிட சொன்னார்கள். ஆனால் ஸ்கெஜூலிங் பிரச்சனை காரணமாக அது முடியவில்லை. சமூக வலைதளங்களில் தேவையற்ற சர்ச்சை மற்றும் க்ளாஷ் பற்றி பரப்புகிறார்கள். ஆனால் பொங்கல் இரு படங்களை எளிதாக தாங்கும்” என்று தெரிவித்தார். ‘பராசக்தி’ படத்தின் வெளியீடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

