கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு அக்ஷயஜித் (5) என்ற மகன் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஷில்பா தனது மகனை அறையில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையிலேயே அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த ஷில்பாவின் கணவர் வீடு திரும்பியபோது, நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததைக் கண்டு சந்தேகமடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி தூக்கிலும், மகன் சடலமாகவும் கிடப்பதைக் கண்டு உறைந்து போனார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்கு வாழ்ந்து வந்த குடும்பத்தில், எதற்காக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

