“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே உள்ளது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எரிக்கக் கூடாத பொருட்கள்:
சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பின்வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்:
பிளாஸ்டிக் பொருட்கள்
பழைய டயர்கள் மற்றும் ரப்பர் பொருட்கள்
செயற்கை இழை துணிகள்
மின் கழிவுகள் உடல்நல பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை:
பிளாஸ்டிக் மற்றும் டயர்களை எரிப்பதன் மூலம் வெளியாகும் நச்சுப் புகையினால் ஏற்படும் பாதிப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்:
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு இது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். நச்சுப் புகையால் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் ஏற்படும். வளிமண்டலத்தில் காற்று மாசு அதிகரிப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
போகி பண்டிகை அன்று அதிகாலையில் எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் கரும்புகை, சாலைகளில் பனிமூட்டத்துடன் கலந்து பார்வைத்திறனைக் குறைக்கும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், திறந்தவெளியில் எரிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

