விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று (ஜனவரி 11) சதுரகிரி கோவிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வருகை தந்திருந்தனர். ஆனால், வனத்துறையினரின் இந்தத் திடீர் தடையால் மலை அடிவாரத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

