Skip to content

கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஸ்ரீதேவி ஜவுளிக்கடையின் புதிய வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியின் கடைசி முனையில், சுமார் 3 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி ஒன்று வளர்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தச் செடியை வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிக வளாகத்தின் உள்ளேயே கஞ்சா செடி வளர்ந்திருந்தது போலீசாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செடி தானாக வளர்ந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு நட்டு வளர்த்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படுவதோடு, அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவையின் முக்கிய வணிகப் பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், வியாபாரிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!