தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜக கூட்டணி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நாளை மதியம் 1.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் பொதுக்கூட்ட இடத்திற்குச் செல்கிறார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமைய உள்ளது.
பிரதமர் வருகையையொட்டி நாளை (23.01.2026) சென்னை – திருச்சி ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்களைச் செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டு, அவை ஈசிஆர் சாலை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சியிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி வழியாகச் செல்லலாம்.
அரசுப் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்களுக்குக் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் வாகனங்கள் திருக்கழுக்குன்றம் அல்லது ஒரகடம் வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் வழக்கம்போல் தடையின்றி இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

