தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அப்பு (எ) எஸ்.சுரேந்தர் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சுரேந்தர்பாண்டியன் அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார்.
பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த சிறுமிக்கு புண்ணியநல்லூர் கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரின் மகன் மணிமாறன் (20) என்பவர் அந்த சிறுமியிடம் கடந்த 2025ம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்துள்ளார். பசுபதிகோவிலை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுதன் (24) என்கிற ஜெயசுதனுடன் அந்த சிறுமியிடம் பழக்கம் வைத்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவருடன் அந்த சிறுமி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த சிறுமியை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியிடம் விசாரித்தபோது மணிமாறன் மற்றும் ஜெயசுதன் ஆகியோர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு- கமிட்டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. உடன் அவர்கள் சிறுமியை பாபநாசம் அனைத்து மகளிர் போலீசுக்கு அழைத்து வந்து புகார் அளிக்க செய்துள்ளனர். அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது மணிமாறன், ஜெயசுதன் ஆகியோர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் சுரேந்தர்பாண்டியன், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த எம்.விஸ்வநாதன், ஆர்.ராக்கி என்கிற ராகேஸ், ஆர்.ஆகாஷ், எம்.சண்முகம், புண்ணியநல்லூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் அசோக் ஆகியோரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா போலீசார் மணிமாறன், ஜெயசுதன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவரும் சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்து மணிமாறன், ஜெயசுதனை இருவரையும் கைது செய்தனர். மேலும் சுரேந்தர் பாண்டியன் உட்பட 5 பேரை நேற்று போக்சோ வழக்கில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஸ்வநாதனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

