Skip to content

முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா: பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முருக பக்தர்கள் “அரோகரா” சரண கோஷம் எழுப்பியும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

சுமார் 4 லட்சம் பக்தர்கள் பழனியில் குவிந்துள்ள நிலையில், நெரிசலைக் கட்டுப்படுத்த கிரிவீதியில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு, 16 இடங்களில் பக்தர்கள் பிரிக்கப்பட்டு மலைக்கோவிலுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் சுமார் 4 முதல் 5 மணி நேரம் காத்திருந்தாலும், பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரும்பு தொட்டில் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்புப் பணியில் 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் திண்டுக்கல், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழனி மட்டுமன்றி அறுபடை வீடுகள் மற்றும் தமிழகத்தின் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!